சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
982   உத்தரகோசமங்கை திருப்புகழ் ( - வாரியார் # 992 )  

கற்பக ஞானக் கடவுள்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தத்தன தானத் தனதன தந்தத்
     தத்தன தானத் தனதன தந்தத்
          தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான

கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
     திற்புத சேனைக் கதிபதி யின்பக்
          கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன்
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்
     றொப்பையி னேறிட் டருளிய தந்திக்
          கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
     பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
          பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
     றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்
          றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ...... டிடுவேனோ
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
     குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்
          கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித்
திக்கய மாடச் சிலசில பம்பைத்
     தத்தன தானத் தடுடுடு வென்கச்
          செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி
உற்பன மாகத் தடிபடு சம்பத்
     தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்
          றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா
உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்
     சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
          றுத்தர கோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே.
Easy Version:
கற்பக ஞானக் கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு
அதிபதி
இன்பக் கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால்
தேன்
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையின்
ஏறிட்டு அருளிய தந்திக் கட்டு இளையாய்
பொன் பதம் அது இறைஞ்சிப் பரியாய பொன் சிகியாய்
கொத்து உருண் மணித் தண்டைபொன் சரி நாதப் பரி புர
என்றுப் பொற்பு உற ஓதிக் கசிவொடு சிந்தித்து இனிதே
யான்
பொன் புகழ் பாடிச் சிவ பதமும் பெற்றுப் பொருள் ஞானப்
பெரு வெளியும் பெற்று
புகல் ஆகத்து அமுதையும் உண்டிட்டு இடுவேனோ
தெற்பம் உள ஆகத் திரள் பரி உம்பல்
குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு எட்டையும் மூடிக்
குருதிகள் மங்குல் செவை ஆகி
திக்(கு) கயம் ஆடச் சிலசில பம்பைத் தத்தன தானத் தடுடுடு
என்கச் செப்பு அறை தாளம் தகு தொகு என்க
சில பேரி தடி படு சம்பத்து உற்பனமாக
அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று உள் செல்வம் மேவிக்
கன மலர் சிந்தத் தொடு வேலா
உள் பொருள் ஞானக் குற மகள் உம்பல் சித்திரை நீடப் பரி
மயில் முன் பெற்று
உத்தர கோசத் தலம் உறை கந்தப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கற்பக ஞானக் கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு
அதிபதி
... (வேண்டுவோர்க்கு வேண்டியதைத் தரும்) கற்பக மரம்
போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில்
வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே,
இன்பக் கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால்
தேன்
... இன்பகரமான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், சோறு,
வெள்ளைச் சர்க்கரை, பால், தேன்,
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையின்
ஏறிட்டு அருளிய தந்திக் கட்டு இளையாய்
... நிரம்பிய இளநீர்,
வாழை, மா, பலா என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய
இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும்
யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே,
பொன் பதம் அது இறைஞ்சிப் பரியாய பொன் சிகியாய் ...
(உன்) எழில்மிகு திருவடியை (முற்பிறப்பில்) வணங்கி, உனக்கு
வாகனமாக (இப்பிறவியில்) அமைந்த அழகிய மயிலை உடையவனே,
கொத்து உருண் மணித் தண்டைபொன் சரி நாதப் பரி புர ...
திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த
தண்டையையும், அழகிய சுநாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும்
அணிந்தவனே,
என்றுப் பொற்பு உற ஓதிக் கசிவொடு சிந்தித்து இனிதே
யான்
... என்றெல்லாம் அழகாக உன்னைத் துதித்து, மனம் கசிந்து
தியானித்து, நன்றாக நான்
பொன் புகழ் பாடிச் சிவ பதமும் பெற்றுப் பொருள் ஞானப்
பெரு வெளியும் பெற்று
... உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ
நிலையையும் பெற்று, மெய்ஞ் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச
உயர் நிலையைப் பெற்று,
புகல் ஆகத்து அமுதையும் உண்டிட்டு இடுவேனோ ...
அப்போது உண்டாவதாகச் சொல்லப்படுகின்ற உடலில் ஊறும் ஞான
அமுதை உண்ணப் பெறுவேனோ?
தெற்பம் உள ஆகத் திரள் பரி உம்பல் ... போர்ச்செருக்குள்ள
உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும்
குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு எட்டையும் மூடிக்
குருதிகள் மங்குல் செவை ஆகி
... குப்பைகளாக உள்ள உடல்களை
உடைய அசுரர்களின் பிணங்களும் எட்டுத் திசைகளையும் மூடி
இரத்தத்தால் திசைகளெல்லாம் சிவக்க,
திக்(கு) கயம் ஆடச் சிலசில பம்பைத் தத்தன தானத் தடுடுடு
என்கச் செப்பு அறை தாளம் தகு தொகு என்க
... எட்டுத்
திக்குகளில் உள்ள யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) அசைந்து
ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று
முழங்க, தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்க,
சில பேரி தடி படு சம்பத்து உற்பனமாக ... சில முரசு
வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும்
தோற்றம் கொடுக்க,
அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று உள் செல்வம் மேவிக்
கன மலர் சிந்தத் தொடு வேலா
... அற்புதமான விண்ணுலகத்து
தேவர்களின் ஊராகிய பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, அங்கே
உள்ள செல்வங்களையும் அடைந்து பொன் மலர்களைச் சிந்த,
வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே,
உள் பொருள் ஞானக் குற மகள் உம்பல் சித்திரை நீடப் பரி
மயில் முன் பெற்று
... உண்மைப் பொருளை அறிந்த ஞானியாகிய
குற மகள் வள்ளியும், (ஐராவதமாகிய) யானையால் வளர்க்கப்பட்ட அழகிய
தேவயானையும், மேம்பட்ட அந்த வாகனமாகிய மயிலும் விளங்கப் பெற்று,
உத்தர கோசத் தலம் உறை கந்தப் பெருமாளே. ... உத்தர கோச
மங்கை என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

Similar songs:

982 - கற்பக ஞானக் கடவுள் (உத்தரகோசமங்கை)

தத்தன தானத் தனதன தந்தத்
     தத்தன தானத் தனதன தந்தத்
          தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான

Songs from this thalam உத்தரகோசமங்கை

982 - கற்பக ஞானக் கடவுள்

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song